tamilnadu

img

மதச்சார்பற்ற ஜனநாயக நம்பிக்கையாளர்கள் ஒன்றுபட வேண்டும்

கொல்கத்தா:
திகிலூட்டும் வகையில் நாட்டில் வலுப்பட்டுள்ள வகுப்புவாதத்தை எதிர்கொள்ள அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக நம்பிக்கையாளர்களும் ஒன்றுபட வேண்டும் என சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்தார். 
வகுப்புவாதத்துக்கு எதிராக முன்னின்று போராடிய இடதுசாரிகள் தேர்தலில் தோல்வியை சந்தித்தனர். அதனால் பின்வாங்கவோ-போராட்டத்தை கைவிடவோ முடியாது. கம்யூனிஸ்ட் லட்சியம் தேர்தல் மட்டுமல்ல. மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து மக்களைத் திரட்டி முன்னேற வேண்டும். அதை வலுவாக நடத்துவோம் எனவும் கூறினார்.  

கொல்கத்தாவில் பிரமோத்தாஸ்குப்தா நினைவக குழு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கத்தில் ‘சமகால இந்தியாவில் வகுப்புவாதத்துக்கு எதிரான போராட்டம்’ என்கிற தலைப்பில் யெச்சூரி உரை நிகழ்த்துகையில், வகுப்புவாத உணர்வுகளையும், போர் அபாயத்தையும் முன்வைத்து பாஜக மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளது. ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகள் அதை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்தன. மக்களை அணிதிரட்டி நடத்தப்படும் பிரச்சாரம், போராட்டத்தின் மூலமாக மட்டுமே இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியும். அதற்கு ஜனநாயக மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ளவர்களின் விரிவான ஒத்துழைப்பு தேவை. 

வகுப்புவாத எதிர்ப்பு போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரசுடன் கைகோர்ப்பது, பாஜகவுக்கு உதவுவதற்கு சமமானது. ஜனநாயக விரோத நடவடிக்கைகளே மம்தாவின் அடையாளம். பாஜகவுக்கு உதவும் நடவடிக்கையை மம்தா தொடர்கிறார். மேற்கு வங்கத்தில் பாஜக வளர வாய்ப்பளித்ததும் திரிணாமுல் கட்சிதான். திரிணாமுல் ஆட்சியில் இதுவரை 213 சிபிஎம் - இடது முன்னணி ஊழியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என யெச்சூரி குறிப்பிட்டார். 
கருத்தரங்கத்திற்கு நிரஞ்சன்சாட்டர்ஜி தலைமை வகித்தார். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிமன்பாசு, முகம்மதுசலீம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

;